Thursday, July 9, 2009

மொட்டையாய் உணர்ந்த நாள்-3

இரவு முழுவதும் தூக்கமே இல்லை, மறுநாள் காலை என்ன செய்வது என்று முடிவு பண்ணி, நம்ம கையில் பணம் கொடுத்ததற்கான ஆதாரத்தை உண்டு பண்ணி விட்டு பின்பு என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று முடிவெடுத்து,ஸ்டாம்பு பேப்பர் எனது பெயரில் வாங்கி வைத்துக் கொண்டோம்.

இரவு 7மணிக்கு வீடு பூந்து விடுவது என முடிவு எடுத்தோம். நண்பர் ஒருவர் கோவை போலீஸ் விஷயங்களை கவனித்துக் கொள்ள கூட்டிக் கொண்டோம்.

12 பேர் என நினைக்கின்றேன், பஸ்ஸில் கிளம்பினோம்,கோவையில் 2 பேர் இணைந்த கொள்வதாக திட்டம். இராமநாதபுரத்தில் அனைவரும் கூடினோம்.

நான் உள்பட 5 பேர் உள்ளே போவதாக முடிவெடுத்தோம்.2 பேர் அருகாமையிலுள்ள வீடுகளில் நிலவரத்தை எடுத்துச் சொல்லி நமக்கு எதிராக திரும்பாத வண்ணம் கையாழிவதாகவும்,மீதி நபர்கள் ஆங்காங்கே தகவல் எல்லைக்குள் இருப்பதாக முடிவெடுத்தோம்.


மாடியில் தான் அவர்களது வீடு இருந்தது. மாடியேறினோம்,கடைசியாய்த் தான் நான் ஏறினேன். கிரில் கதவு திறந்தே இருந்தது.பிரம்பு நாற்காலியில் அமர்ந்து தீவிர ஆலோசனயில் இருந்தவன், புது ஆட்கள் தலையைப் பார்த்தவுடன்

யார் வேணுங்க என்று கேட்டு முடிக்கவும் நான் உள்ளே வரவும் அவனின் முகத்தில் ஒரு பதட்டம் முழுமையாய் வந்திருந்தது.

‘’தம்பி வாப்பா’’

என் நண்பன் பப்பி, ‘’டே-இவன் தான் ஜெயக்குமாரா?’’ என்றான்.

ஆம் என்று சொல்லி முடிக்கும் முன்பே ‘’ஐயோ’’ என்ற அலறல், ‘’டே-பப்பி கை வைக்க கூடாதுன்னு சொல்லித் தானே கூட்டிட்டு வந்தேன்’’ என்றான் ராஜா...
அதற்குள் சொத்து என்ற விஷ்ணுவும் இரண்டு தட்டுத் தட்ட உள்ளிருந்து அந்த அம்மா ‘’தம்பி அவரு ஹார்ட்டு பேஷண்ட்ப்பா-விட்டுறுங்க’’

இடையில் புகுந்த ராஜா அவர்களை விலக்கி விட்டு ‘’ஏங்க இது உங்களுக்கு தேவை தானா, ஒண்ணு வீடு மாற்றும் போது இவனிடம் ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமல்லவா’’ என்றான்


அதற்குள் சொத்துவும், ஜெயக்குமாரோடு உட்கார்ந்து ஆலோசித்துக் கொண்டிருந்தவனோடு பேச,

டே சொத்து அவன்கிட்டே என்ன பேச்சு, நாலு சாத்து சாத்தாமல் என்றவாறு பப்பி அவனை நோக்கி பாய,

டே இவரு நம்ம ஊருதான் நமக்கு தெரிஞ்சவர் தான் என்றான் அவசர அவசரமாய் சொத்து.

அதற்குள் ராஜா ஜெயக்குமாரை உள் ரூமுக்கு தள்ளிட்டுப் போய்
பணத்துக்கு என்ன சொல்லுகிறாய் என்று கேட்க..

‘’தம்பி ஒரு வாரத்தில் கொடுத்துடுறேன், என் பணம் எல்லாம் மாட்டிக் கொண்டு விட்டது.. இப்பவும் தம்பியோட வேலைக்கு நான் கேரண்டி’’ என்றான் ஜெயக்குமார்.

‘’அதெல்லாம் கதைக்காகது, பணத்தை இப்பவே கொடுக்கச் சொல்லுடா ராஜா’’ என்றான் உள் ரூமுக்குள் வந்த பப்பி


‘’தம்பி இப்ப என்கிட்ட இல்லை’’


‘’பின்ன என்ன மயித்துக்குடா பணத்தை வாங்கினாய்’’ என்றான் பப்பி.

‘’சரிங்க, ஒரு வாரத்தில் பணத்தை தர என்ன கேரண்டி? நாளைக்கே வேறு இடத்துக்கு வீட்டை மாற்றி விட்டால் நாங்க என்ன பண்ணுவது?’’ராஜா.‘’கேரண்டிக்கு நம்ம தங்கவேலுத் தம்பியைச் சொல்லச் சொல்லட்டுமா?’’என்றான் ஜெயக்குமார்.

‘’தங்கவேலுவா யார் அது’’? என்றான் ராஜா.

ராஜா அவரு நமக்கு(நமக்கு=எனக்கு)தெரிஞ்சவரு தான், அவரோட ஒயின்ஸ் கடை கூட பொள்ளாச்சியிலிருக்கிறது என்றான் சொத்து..

‘’அதற்குள் டே ராஜா இவரு தான் தங்கவேலு’’ என்று பப்பி, முன்ரூமிலிருந்த தங்கவேலுவை இழுத்துக் கொண்டு வந்தான்.

‘’என்னங்க தங்கவலு, இவரு ஒரு வாரத்தில் பணம் கொடுக்கிறேன்-னு சொல்லுறாரு, எங்களுக்கு நம்பிக்கை இல்லை,அவரு நீங்க பணத்துக்கு கேரண்டின்னு சொல்லுறார், நீங்க என்ன சொல்லுறீங்க?’’ என்றான் ராஜா.

தங்கவேலு‘’ஆமாங்க அவருக்கு ஒரு வாரத்தில் பணம் வந்துடும்,வாங்கித் தர நானாச்சு’’

ராஜா ஜெயக்குமாரைப் பார்த்து, ‘’அண்ணா, இதெல்லாம் நடக்கின்ற மாதிரி தெரியல,நீங்க ஒண்ணு பண்ணுங்க இந்த பேப்பரில் ஒரு கையெழுத்து போட்டுக் கொடுங்க,அடுத்த வாரம் வந்து பணத்தை வாங்கீட்டு பேப்பரை கொடுக்கின்றோம்’’

‘’சுரேஷூ அந்த பேப்பரைக் கொண்டா’’ என்றான்.

தயாராய் இருந்த பேப்பரை நீட்டினேன். இந்த மாதிரி எத்தனையைப் பார்த்திருப்பேன் என்ற எண்ணம் கண்களில் ஒரு நொடி தோன்றி மறைந்தது.

நீட்டின பக்கங்களில் எல்லாம் ஜெயக்குமார் கையெழுத்திட்டான்.
சாட்சியாக தங்கவேலுவும் கையெழுத்திட்டான்.
தாங்கள எதிலெ கையெழுத்துப் போடுகிறோம் என்றே அறியாமல் போட்டனர்., பாண்டு,புரோநோட்,வெற்றுத்தாள் என இருவரும் தனித்தனியாகவும்,ஒருவருக்கொருவர் சாட்சியாகவும் போட்டு முடித்தனர்.

அப்பொழுது தான் வீட்டைச் சுற்றிப்பார்த்து விட்டு வந்த பப்பி,’’ஏன்டா இவனுக பணம் கொடுக்கிறதுக்கு போடுகிற மாதிரி தெரியவில்லை. அதனால இங்கிருக்கும் சில பொருட்களை நாம கொண்டு போவோம். பணம் கொடுத்த பின்பு கொடுக்கலாம்’’.

இன்னும் தொடரும்....

மொட்டையாய் உணர்ந்த நாள்-2

லாரிப்பேட்டைக்கு எனது நண்பனான டோனியிடம் கதைகளைச் சொன்னேன்.இவன் அங்கு டயர்க் கடை வைத்திருந்த்தால், அனைத்து லாரி புக்கிங் ஆபீஸிலும் அனைவரையும் தெரியுமாதலால்,விரைவாக விசாரித்தோம்.

நண்பர்கள் வட்டாரத்திற்கு தகவல் அனுப்பப் பட்டு, அனைவரும் மீட்டிங் பாயின்ட்டில் உட்கார்ந்து விவாதிக்கபட்டது.கொலைக் குற்றவாளியைப் போல விசாரித்தனர்.

இதற்கிடையே,டோனி வந்து லாரி கொச்சின் போயிருக்கிறது,இங்கிருந்து லோடு ஏற்றி கோவை போயிருக்கிறது,எங்கே இறகினார்கள் என்று விசாரிக்க- இன்று மாலை டிரைவர் போன் பண்ணும் போது கேட்டுச் சொல்லிவிடுவார்கள் என்று சொன்னான்.

அனைவரும் மாலை வரை காத்திருப்பதாக சொல்லி உணவு இடைவேளைக்காய் சபை ஒத்திவைக்கப்பட்டது.

இரண்டு பேர் அவன் போன் பண்ணும் எஸ்.டி.டீ பூத்துக்கு போய் எந்த எந்த நம்பருக்கு போன் பண்ணினான் என்று விசாரித்தானர். போன் நம்பர்களைத் தந்து கூடவே ஒரு தகவலும் தந்தான் எஸ்.டி.டீ பூத்துக்காரன்
அவன் போன் பண்ணும் நம்பரில் போன் வைக்கப் பட்டு விட்ட பின்பும் போனை வைத்து பேசிக்கொண்டே இருப்பானாம்(ஆஹா இப்படித் தானா கதை விட்டுக் கொண்டிருந்திருக்கின்றானா என்று நினைத்துக் கொண்டோம்) 100 ரூ-க்கு குறையாமல் பில் வரும் போது என்னத்தைச் சொல்ல என்று நினைத்து விட்டு விட்டானாம்.


டோனி வந்து லாரிக்காரன் இறக்கிய இடத்தைச் சொன்னதாக கூறினான்.அப்பொழுதே இரண்டு பேர் கூட நானும் கிளம்பி கோவை இராமநாதபுரத்துக்கு வந்தோம்.நான் தொலைவில் நின்று கொள்ளவும் மற்ற இருவர் சென்று பழைய வீட்டில் இருந்தவர்களைப் பற்றிய விவரத்தை கேட்க செல்வது போல சென்றனர்.(என்னைத் தவிர வேறு யாரும் அவனையோ,அவன் மனைவியையோ பார்த்ததில்லை)

அவர்களுக்கு அடையாளமாக அவன் வீட்டில் வரவேற்பறையில் பிரம்பு நாற்காலி,மற்றும் டீப்பாய் போட்டிருக்கும் விஷயத்தை கூறி அனுப்பினேன்.

அதே மாதிரி சென்று விசாரித்த போது, அதே அடையாளத்தில் பிரம்பு நாற்காலி,மற்றும் டீப்பாய் போட்டிருந்ததையும்,அந்த பொம்பளையையும் பார்த்திருக்கின்றனர்.
முன் பக்க அறை கிரில் அடித்திருந்ததால் உள்ளே நின்று கொண்டே அந்த அம்மா இவர்களிடம் நாங்க நேற்றுத்தான் இங்க வந்தோம்,அதனால் முன்னாடி இருந்தவர்களைப் பற்றி எங்களுக்குத் தெரியாது என்றாளாம்.

உறுதியானது. இரவு பொள்ளாச்சி திரும்பினோம். அடுத்த நாளை ஆபரேஷன் நாளாக மாற்ற முடிவு எடுக்கப் பட்டது.

தொடரும்.....