Friday, July 17, 2009

பெங்காளி மீன் குழம்பு

பெங்காளி மீன் குழம்பு
போன கதையில் வந்த மகாத்து தான் இதிலும்,
எனது பிளாட்டானது அனைவரது மீட்டிங் பாயிண்டாக மாறியது.இரவு 11 மணி வரையிலும் அனைவரும் உட்கார்ந்து பல விஷயமாக பேசிக் கொண்டிருப்போம்.
குஜராத்தில் மது விலக்கு அமலில் இருந்தாலும் ஒரு நாளைக்கு ஒரு புல் பாட்டில் என்ற கணக்கில் பாட்டில் ஒவ்வொரு மெக்கானிக்கல் காண்டிராக்டரிடமிருந்து மகாத்துக்கு வந்து விடும்.
எனது ரூமிற்க்குத் தான் வரும். இதில் கொடுமை என்னெவென்றால் நான் குடிப்பதை நிறுத்தி 10 வருடங்களானது(இன்று வரை அதே தான்).எனது ரூம் தான் ஸ்டாக் பாயின்ட் & மீட்டிங் பாயின்ட் எல்லாம்.எல்லோருக்கும் எனது சமையல் பிடித்திருந்த்தால்(அப்படி சொன்னால் தான் எல்லோரும் தண்ணி அடிக்கும் போது டிஷ் அயிட்டங்கள் வந்து சேருமல்லவா?) ஒரு கூட்டம் வந்து உட்கார்ந்திருக்கும். ஆனால் எல்லா உதவியும் பண்ணிக் கொண்டிருப்பார்கள்.

எங்களோடு கபில் என்றொரு உ.பி காரன் இருந்தான். வீட்டில் சைவம், ஆனால் இவன் நான் வெஜ் சாப்பிட எங்களோடுதான் வந்து கலந்து கொள்வான்.

ஞாயிற்றுக் கிழமை என்பது எங்களுடைய விஷேச நாள்.

ஒரு ஞாயிற்றுக் கிழமை எனக்கும் கபிலுக்கும் (O.T)வேலை. சமையல் புரோக்கிராம் எல்லாம் போய் விடுமே என்ற கவலை. அப்போது தான் மகாத்து தான் அதைப் பற்றி கவலைப் பட வேண்டாம், நான் மீன் வாங்கி குழம்பு வைத்து விடுகின்றேன் என்று பொறுப்பேற்றுக் கொண்டான்.
கபிலும் நானும் அரை மனதோடு சரி சொன்னோம. அடுத்த நாள் நாங்கள் கிளம்பி விட்டோம்.
Site க்கு போக ரோடு வசதி அவ்வளவு சரி இல்லை.
ரோட்டிலேயே போக வேண்டுமானால் கிட்டத் தட்ட 50கி.மீ சுற்றிப் போக வேண்டும்.

குஜராத் மெரி டைம் போர்டில் அனுமதி பெற்று ஆட்கள் போக மட்டும் ஒரு பாலம் அமைத்திருந்தனர். பாவ் நகரில் இருந்து பாலம் வரைக்கும் ஜீப், பாலத்தை நடந்து கடந்த பின்பு அங்கே ஒரு ஜீப் காத்திருக்கும். அதில் ஏறி 15 கி.மீ உப்பங் கழிகளில் கடக்க வேண்டும். ஒவ்வொரு ஜீப்பிலும் வயர்லெஸ் இருக்கும்.

இதனாலே எங்களுக்கு நேரமாகி விடும். அன்றும் மதியம் ஆகி விட்டது.
ஜீப்பை நேராக மகாத்து பிளாட்டுக்கு விட்டோம். சரியான இறங்கினோம். வரவேற்பு பலமாக இருந்தது.

சாப்பாடு டேபிளில் காத்திருந்தது. சாப்பட்டை போட்டுக் கொண்டு பொறித்த மீனை எடுத்து வைத்துக் கொண்டோம். டால் பிரை மாதிரி பருப்பு இருந்தது. ‘’மீன் குழம்பை எங்கேடா என்றோம்’’?
இதோ இது தான் என்று பருப்புக்குள் கரண்டியை விட்டு எடுத்தான், உள்ளிருந்து மீன் தலை. வாந்தி வராத குறை தான் எங்களுக்கு.

விசாரித்த போது பெங்காளிகள் இப்படித் தான் பண்ணுவார்களாம்.
அன்றோடு மகாத்தினுடைய சமையலுக்கு தடா....

Wednesday, July 15, 2009

ஒரு நாளைக்கு ஒன்னுன்னா?

பலமொழி பேசுபவர்களோடு கலந்து வேலை செய்த அனுபவத்தை உங்களில் பலர் அனுபவித்து இருப்பீர்கள்.

சில சமயம் ஆரோக்கியமான கலந்துரையாடல் இருக்கும்,சமயங்களில் வெட்டுக் குத்துக்கும் (அடி தடி தான்) கொண்டு போய் விடக் கூடியதாகவும் இருக்கும்.

நான் பாவ் நகரில் நிர்மா சோடா ஆஷ் (Nirma Soda Ash) புராஜெட்டில் ஃ வேலை செய்த போது அவ்வாறு தான்.

எல்லா மாநிலமும் அங்கே இருந்த்து.

இந்த புராஜெக்டில் ஆரம்பித்த உடனே பணி மாற்றம் செய்து அனுப்பப் பட்ட 5பேரில் நானும் ஒருவன்.

நாங்கள் கன்சல்ட்டன்ட் (ஹம்ரீஷ் அன்டு கிளாஸ்கோ கன்சல்டன்டுNow JH&G ) பக்கம் என்பதால், எங்களுடைய வேலை குவாலிட்டி செக்கிங் மட்டும் தான்.

எனக்கு அடுத்ததாக ஒரு குஜராத்தி குப்தா வந்தான். அவன் படித்ததெல்லாம் பாண்டிச்சேரி என்பதால் ஈசியாய் ஒட்டிக் கொண்டோம்.. அவங்க பிளாட் அடுத்த கட்டிடத்தில், பேமிலியோடு இருந்தான்.இரண்டு நாளைக்கு ஒரு தடவை இட்லி செய்வார்கள், ஆனால் குஜராத்தி சாம்பார் தான் வைப்பார்கள், நான் தமிழ் நாட்டு சாம்பார் வைத்து கொண்டு போய் கொடுத்தேன் அதன் பின்பு இட்லி அவர்கள் சாம்பார் நான் என முறை வைத்து சாப்பிடுவோம்.
மெக்கானிக்கல் வேலையின் ஆரம்பத்தின் போது வந்தான் எனக்கு முன்னமே பரிச்சயமான மகாத்து என்பவன்.(முன்பு நான் டிரையா பைன்(Tria Fine Chem Ltd) என்ற கம்பெனியில் கம்பெனி இன்ஜினியராக இருந்த போது அவன் கன்சல்டன்டாக இருந்தான், அவன் சொல்லித் தான் நான் இந்தக் கம்பெனிக்கு வந்தேன்)

இவன் வெஸ்ட் பெங்காலைச் சேர்ந்தவன்.ஸ்பெஷல் புராஜெக்டுக்கு எல்லாம் அனுப்பப் பட்டு கம்பெனியிலிருக்கும் அனைவரோடும் பரிச்சயமானவன்.இவனும் நானும் தான் பேச்சிலர். சமையல் நாங்களிருவரும் சேர்ந்தே பண்ணுவோம் என்று முடிவெடுத்தோம்.(அவனுகளுக்கும் அரிசி சாதம் நமக்கும் அதே தானே)

குப்தாவோடும் இவன் இருந்திருக்கின்றான் வேறோர் புராஜெக்டில். அதனால் அவர்களைப் பற்றி ஒரு முறை சொன்னான்

அந்த புராஜெக்டில் இருந்த போது, ஓர் பீகாரி இன்ஜினியர் அப்போது தான் புதிதாய் கல்யாணமாய் வந்திருக்கின்றான். குப்தாவுக்கு பக்கத்து பிளாட்டில் தான் குடி.


பொண்ணு நல்ல கலரு, அவன் எகிடு தகிடாய் இருப்பானாம் அப்போது ஒரு தடவை மிஸஸ்.குப்தா எப்படி இவனைக் கல்யாணம் பண்ண சம்மதித்தாய் என்றிருக்கிறாள்.

அன்று இரவே அது பாஸ் ஆகி,மறுநாள் ஆபீஸில் வெடித்தது.இனி மேல் நடக்கக் கூடாது என குப்தாவிடம் எச்சரிக்கப்பட்டது. சில வாரங்கள் கழிந்தன.

ஒரு நாள் குடும்பச் செலவுகள் பற்றிப் பேசிக் கொண்டனராம் அப்போது மிஸஸ் குப்தா சொல்லியிருக்கிறாள், குழந்தைப் பிறப்பைத் தள்ளிப் போட மாதத்திற்கு 300ரூ காண்டத்துக்கு மட்டும் செலவு பண்ணுகிறோம்,என்றாளாம்.

அடுத்த நாள் ஆபீஸில் குசு குசுக்கப் பட்டது.

மகாத்து குப்தாவைக் கூப்பிட்டு.. 10ரூக்கு 3 ன்னா 30நாளைக்கு(அந்த நாளையெல்லாம் சேர்த்து) 100ரூ போதுமே!!!அதென்ன வித்தைடா சாமி ஒரு நாளைக்கு 3 தடவை என்பது என்றானாம்.

அடுத்த நாளிலிருந்து மிஸஸ் குப்தா யாரிடமும் வாய் திறக்கவே இல்லையாம்.

Friday, July 10, 2009

மொட்டையாய் உணர்ந்த நாள்-4

இத்தனை களேபரத்திலும் சபரி என்ற நண்பன் ஓடிச் சென்று என்.பி வண்டியை அழைத்தே வந்து விட்டான்

பொருட்கள் அனைத்தும் தேக்கினால் செய்யப் பட்டவை.இறுதியாக டபுள் காட் தேக்கு மரக் கட்டில், தேக்கினால் செய்யப் பட்ட டிரஸ்ஸிங் டேபிள்,தேக்கு டைன்னிங் டேபிள,தேக்கு மர அலமாரி,
இவைகளை எடுப்பதாக முடிவெடுத்து,ஜெயக்குமாரிடம் இப் பொருட்களை எங்களுக்கு விற்றதாக ஒரு பேப்பரில் எழுதி கையொப்பம் வாங்கிக் கொண்டு பொருடகளை லாரியில் ஏற்றி விட்டோம்,
‘’ராஜா லாரிக்கு உண்டான பணத்தை வாங்கு’’என்றான் பப்பி.

1700ரூ அவர்களிடமிருந்து கிட்டத் தட்ட பிடுங்கப்பட்டது.

லாரியிலேயே அனைவரும் திரும்பினோம், வழி நெடுக சாகசக் கதை பேசி.
இரவு 12.30 ஆகி விட்டது, வீட்டில் லாரி வந்து நிற்கும் சத்தம் கேட்டு வெளியே வந்தனர். அதிர்ச்சியில் உறைந்து விட்டனர்.

ஏன்டா இப்படிப் பண்ணுனீங்க,ஒரு பத்தாயிரத்துக்கு சாமான்களை எல்லாம் எடுப்பது என்பது எவ்வளவு பெரிய ரவுடித்தனம்??என்றது அம்மா.

‘’அம்மா பத்தாயிரம் பெரியது இல்லை,நம்மை அவன் ஏமாளி ஆக்கினதால தான் இதனைச் செய்தோம்’’ என்றான் ராஜா.

அடுத்த நாள் மாலையில் மீதமிருந்த பணம் சோம பானத்திற்கு ஒதுக்கப்பட்டது.
அதிலொருவன் டே நண்பா பத்தவே மாட்டேன்கிறது, பேசாமல் நம்ம(தங்க வேலு ஒயின்ஸ் பொள்ளாச்சியிலிருந்தது) ஒயின்ஸில் போய் 2 புஃல் எடுத்துட்டு வருவோமா என்றான்.

ஒரு மாதம் வரை எதுவும் பேசாமலிருந்தோம். பின்பு தங்கவேலுவை சந்தித்தோம்,அந்த ஆளுக்கு இன்னும் பணம் வரவில்லை என்றார்,
ராஜா, ‘’பரவாயில்லைங்க,இந்த வாரம் நாங்க பார்ப்போம், பணம் வரவில்லை என்றால்,கொண்டு வந்த சாமான்களை விற்று எங்க பணத்தை எடுத்துக்குவோம் எல்லோர் மேலேயும் ஒரு கேஸையும் போட்டு விடுவது என்று முடிவெடுத்துள்ளோம்’’ என்றான்
தங்கவேலு ‘’நான் அந்த ஆளிடம் சொல்லுகிறேனுங்க’’

அடுத்த இரண்டாவது நாள் தங்கவேலு ‘’நாளைக்கு டாக்குமென்டுகளைக் கொண்டு வாங்க, பொருட்களையும் கொடுத்து விடுங்க, பணம் நான் தான் கொடுக்கிறேன், அதனால பொருளாவது நமக்கு மிஞ்சட்டும்’’ என்றார்

அடுத்த நாள் மாலை அவர்களிடமிருந்து தகவல் வந்ததை அடுத்து கிளம்பினோம்.
பொள்ளாச்சியின் தாதா கோஷ்டியில் இருந்த நண்பனை அழைத்து பைசலை முடித்துத் தரச் சொன்னோம்.

அவர்கள் தரப்பிலிருந்து ஒரு வக்கீலும் மற்றும் சில லோக்கல் பார்ட்டிகளுமாய் பேச்சுவார்த்தை தொடங்கியது.

கடைசியாய் ரூ14,500 தருவதாக ஒப்புக் கொண்டு பணத்தைக் கொடுத்தனர், டாக்குமென்டுகளைக் கொடுத்தோம்.

தாதா நண்பனுக்கு 1000 கொடுத்தோம்.

சாமான்களை எடுக்க லாரியும் ஆட்களையும் அனுப்பினர்.
ஏற்றிவிட்ட பின்பு ஒரு இறுக்கம் குறைந்த தருணத்தில் அவர்களுடைய வக்கீல் ‘’எவ்வளவு பெரிய காரியத்தை சிம்பிளாகச் செய்திட்டீங்க, இவர் கொடுத்த டாக்குமென்டை வைத்து இவரோட தோப்பையே பறிச்சிருக்கலாம் நீங்க!!

இப்போ இது வரைக்கும் ஜெயக்குமாரிடம் ஏமாந்தது 3.5லட்சத்தை தாண்டி விட்டது,

எல்லாம் தனியே பண்ணீட்டு கடைசியிலே லோக்கல் ரவுடியை எதுக்குங்க கூப்பிட்டீங்க?’’ என்றார்.

வீட்டில் பணத்தைக் கொடுத்த போது,
நம்ம காசை மட்டும் கொடுத்து விட்டு மீதியை இத்தனை தூரம் பண்ணிய பசங்க கிட்டே கொடுத்துடு என்றனர்.

2நாள்கள் மிதந்தனர் சோம பானத்தில்...

பப்பி கேட்டான் அப்பா இனி வேற எங்காவது பணத்தை கொடுத்திருக்கிறாரா? சொல்லு வாங்கிடலாம்.

Thursday, July 9, 2009

மொட்டையாய் உணர்ந்த நாள்-3

இரவு முழுவதும் தூக்கமே இல்லை, மறுநாள் காலை என்ன செய்வது என்று முடிவு பண்ணி, நம்ம கையில் பணம் கொடுத்ததற்கான ஆதாரத்தை உண்டு பண்ணி விட்டு பின்பு என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று முடிவெடுத்து,ஸ்டாம்பு பேப்பர் எனது பெயரில் வாங்கி வைத்துக் கொண்டோம்.

இரவு 7மணிக்கு வீடு பூந்து விடுவது என முடிவு எடுத்தோம். நண்பர் ஒருவர் கோவை போலீஸ் விஷயங்களை கவனித்துக் கொள்ள கூட்டிக் கொண்டோம்.

12 பேர் என நினைக்கின்றேன், பஸ்ஸில் கிளம்பினோம்,கோவையில் 2 பேர் இணைந்த கொள்வதாக திட்டம். இராமநாதபுரத்தில் அனைவரும் கூடினோம்.

நான் உள்பட 5 பேர் உள்ளே போவதாக முடிவெடுத்தோம்.2 பேர் அருகாமையிலுள்ள வீடுகளில் நிலவரத்தை எடுத்துச் சொல்லி நமக்கு எதிராக திரும்பாத வண்ணம் கையாழிவதாகவும்,மீதி நபர்கள் ஆங்காங்கே தகவல் எல்லைக்குள் இருப்பதாக முடிவெடுத்தோம்.


மாடியில் தான் அவர்களது வீடு இருந்தது. மாடியேறினோம்,கடைசியாய்த் தான் நான் ஏறினேன். கிரில் கதவு திறந்தே இருந்தது.பிரம்பு நாற்காலியில் அமர்ந்து தீவிர ஆலோசனயில் இருந்தவன், புது ஆட்கள் தலையைப் பார்த்தவுடன்

யார் வேணுங்க என்று கேட்டு முடிக்கவும் நான் உள்ளே வரவும் அவனின் முகத்தில் ஒரு பதட்டம் முழுமையாய் வந்திருந்தது.

‘’தம்பி வாப்பா’’

என் நண்பன் பப்பி, ‘’டே-இவன் தான் ஜெயக்குமாரா?’’ என்றான்.

ஆம் என்று சொல்லி முடிக்கும் முன்பே ‘’ஐயோ’’ என்ற அலறல், ‘’டே-பப்பி கை வைக்க கூடாதுன்னு சொல்லித் தானே கூட்டிட்டு வந்தேன்’’ என்றான் ராஜா...
அதற்குள் சொத்து என்ற விஷ்ணுவும் இரண்டு தட்டுத் தட்ட உள்ளிருந்து அந்த அம்மா ‘’தம்பி அவரு ஹார்ட்டு பேஷண்ட்ப்பா-விட்டுறுங்க’’

இடையில் புகுந்த ராஜா அவர்களை விலக்கி விட்டு ‘’ஏங்க இது உங்களுக்கு தேவை தானா, ஒண்ணு வீடு மாற்றும் போது இவனிடம் ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமல்லவா’’ என்றான்


அதற்குள் சொத்துவும், ஜெயக்குமாரோடு உட்கார்ந்து ஆலோசித்துக் கொண்டிருந்தவனோடு பேச,

டே சொத்து அவன்கிட்டே என்ன பேச்சு, நாலு சாத்து சாத்தாமல் என்றவாறு பப்பி அவனை நோக்கி பாய,

டே இவரு நம்ம ஊருதான் நமக்கு தெரிஞ்சவர் தான் என்றான் அவசர அவசரமாய் சொத்து.

அதற்குள் ராஜா ஜெயக்குமாரை உள் ரூமுக்கு தள்ளிட்டுப் போய்
பணத்துக்கு என்ன சொல்லுகிறாய் என்று கேட்க..

‘’தம்பி ஒரு வாரத்தில் கொடுத்துடுறேன், என் பணம் எல்லாம் மாட்டிக் கொண்டு விட்டது.. இப்பவும் தம்பியோட வேலைக்கு நான் கேரண்டி’’ என்றான் ஜெயக்குமார்.

‘’அதெல்லாம் கதைக்காகது, பணத்தை இப்பவே கொடுக்கச் சொல்லுடா ராஜா’’ என்றான் உள் ரூமுக்குள் வந்த பப்பி


‘’தம்பி இப்ப என்கிட்ட இல்லை’’


‘’பின்ன என்ன மயித்துக்குடா பணத்தை வாங்கினாய்’’ என்றான் பப்பி.

‘’சரிங்க, ஒரு வாரத்தில் பணத்தை தர என்ன கேரண்டி? நாளைக்கே வேறு இடத்துக்கு வீட்டை மாற்றி விட்டால் நாங்க என்ன பண்ணுவது?’’ராஜா.



‘’கேரண்டிக்கு நம்ம தங்கவேலுத் தம்பியைச் சொல்லச் சொல்லட்டுமா?’’என்றான் ஜெயக்குமார்.

‘’தங்கவேலுவா யார் அது’’? என்றான் ராஜா.

ராஜா அவரு நமக்கு(நமக்கு=எனக்கு)தெரிஞ்சவரு தான், அவரோட ஒயின்ஸ் கடை கூட பொள்ளாச்சியிலிருக்கிறது என்றான் சொத்து..

‘’அதற்குள் டே ராஜா இவரு தான் தங்கவேலு’’ என்று பப்பி, முன்ரூமிலிருந்த தங்கவேலுவை இழுத்துக் கொண்டு வந்தான்.

‘’என்னங்க தங்கவலு, இவரு ஒரு வாரத்தில் பணம் கொடுக்கிறேன்-னு சொல்லுறாரு, எங்களுக்கு நம்பிக்கை இல்லை,அவரு நீங்க பணத்துக்கு கேரண்டின்னு சொல்லுறார், நீங்க என்ன சொல்லுறீங்க?’’ என்றான் ராஜா.

தங்கவேலு‘’ஆமாங்க அவருக்கு ஒரு வாரத்தில் பணம் வந்துடும்,வாங்கித் தர நானாச்சு’’

ராஜா ஜெயக்குமாரைப் பார்த்து, ‘’அண்ணா, இதெல்லாம் நடக்கின்ற மாதிரி தெரியல,நீங்க ஒண்ணு பண்ணுங்க இந்த பேப்பரில் ஒரு கையெழுத்து போட்டுக் கொடுங்க,அடுத்த வாரம் வந்து பணத்தை வாங்கீட்டு பேப்பரை கொடுக்கின்றோம்’’

‘’சுரேஷூ அந்த பேப்பரைக் கொண்டா’’ என்றான்.

தயாராய் இருந்த பேப்பரை நீட்டினேன். இந்த மாதிரி எத்தனையைப் பார்த்திருப்பேன் என்ற எண்ணம் கண்களில் ஒரு நொடி தோன்றி மறைந்தது.

நீட்டின பக்கங்களில் எல்லாம் ஜெயக்குமார் கையெழுத்திட்டான்.
சாட்சியாக தங்கவேலுவும் கையெழுத்திட்டான்.
தாங்கள எதிலெ கையெழுத்துப் போடுகிறோம் என்றே அறியாமல் போட்டனர்., பாண்டு,புரோநோட்,வெற்றுத்தாள் என இருவரும் தனித்தனியாகவும்,ஒருவருக்கொருவர் சாட்சியாகவும் போட்டு முடித்தனர்.

அப்பொழுது தான் வீட்டைச் சுற்றிப்பார்த்து விட்டு வந்த பப்பி,’’ஏன்டா இவனுக பணம் கொடுக்கிறதுக்கு போடுகிற மாதிரி தெரியவில்லை. அதனால இங்கிருக்கும் சில பொருட்களை நாம கொண்டு போவோம். பணம் கொடுத்த பின்பு கொடுக்கலாம்’’.

இன்னும் தொடரும்....

மொட்டையாய் உணர்ந்த நாள்-2

லாரிப்பேட்டைக்கு எனது நண்பனான டோனியிடம் கதைகளைச் சொன்னேன்.இவன் அங்கு டயர்க் கடை வைத்திருந்த்தால், அனைத்து லாரி புக்கிங் ஆபீஸிலும் அனைவரையும் தெரியுமாதலால்,விரைவாக விசாரித்தோம்.

நண்பர்கள் வட்டாரத்திற்கு தகவல் அனுப்பப் பட்டு, அனைவரும் மீட்டிங் பாயின்ட்டில் உட்கார்ந்து விவாதிக்கபட்டது.கொலைக் குற்றவாளியைப் போல விசாரித்தனர்.

இதற்கிடையே,டோனி வந்து லாரி கொச்சின் போயிருக்கிறது,இங்கிருந்து லோடு ஏற்றி கோவை போயிருக்கிறது,எங்கே இறகினார்கள் என்று விசாரிக்க- இன்று மாலை டிரைவர் போன் பண்ணும் போது கேட்டுச் சொல்லிவிடுவார்கள் என்று சொன்னான்.

அனைவரும் மாலை வரை காத்திருப்பதாக சொல்லி உணவு இடைவேளைக்காய் சபை ஒத்திவைக்கப்பட்டது.

இரண்டு பேர் அவன் போன் பண்ணும் எஸ்.டி.டீ பூத்துக்கு போய் எந்த எந்த நம்பருக்கு போன் பண்ணினான் என்று விசாரித்தானர். போன் நம்பர்களைத் தந்து கூடவே ஒரு தகவலும் தந்தான் எஸ்.டி.டீ பூத்துக்காரன்
அவன் போன் பண்ணும் நம்பரில் போன் வைக்கப் பட்டு விட்ட பின்பும் போனை வைத்து பேசிக்கொண்டே இருப்பானாம்(ஆஹா இப்படித் தானா கதை விட்டுக் கொண்டிருந்திருக்கின்றானா என்று நினைத்துக் கொண்டோம்) 100 ரூ-க்கு குறையாமல் பில் வரும் போது என்னத்தைச் சொல்ல என்று நினைத்து விட்டு விட்டானாம்.


டோனி வந்து லாரிக்காரன் இறக்கிய இடத்தைச் சொன்னதாக கூறினான்.அப்பொழுதே இரண்டு பேர் கூட நானும் கிளம்பி கோவை இராமநாதபுரத்துக்கு வந்தோம்.நான் தொலைவில் நின்று கொள்ளவும் மற்ற இருவர் சென்று பழைய வீட்டில் இருந்தவர்களைப் பற்றிய விவரத்தை கேட்க செல்வது போல சென்றனர்.(என்னைத் தவிர வேறு யாரும் அவனையோ,அவன் மனைவியையோ பார்த்ததில்லை)

அவர்களுக்கு அடையாளமாக அவன் வீட்டில் வரவேற்பறையில் பிரம்பு நாற்காலி,மற்றும் டீப்பாய் போட்டிருக்கும் விஷயத்தை கூறி அனுப்பினேன்.

அதே மாதிரி சென்று விசாரித்த போது, அதே அடையாளத்தில் பிரம்பு நாற்காலி,மற்றும் டீப்பாய் போட்டிருந்ததையும்,அந்த பொம்பளையையும் பார்த்திருக்கின்றனர்.
முன் பக்க அறை கிரில் அடித்திருந்ததால் உள்ளே நின்று கொண்டே அந்த அம்மா இவர்களிடம் நாங்க நேற்றுத்தான் இங்க வந்தோம்,அதனால் முன்னாடி இருந்தவர்களைப் பற்றி எங்களுக்குத் தெரியாது என்றாளாம்.

உறுதியானது. இரவு பொள்ளாச்சி திரும்பினோம். அடுத்த நாளை ஆபரேஷன் நாளாக மாற்ற முடிவு எடுக்கப் பட்டது.

தொடரும்.....

Wednesday, July 8, 2009

மொட்டையாய் உணர்ந்த நாள்

யார் யாரிடம் நம்பிக்கை வைக்க வேண்டும் என்பதில் தேர்ச்சி இல்லாத காலகட்டத்தில் இருந்த போது (92ம் வருடம் )நிகழ்ந்தவை.


எனது தந்தையின் அலுவலகத்தில் வைத்து அந்த நபரைப் பாரத்தேன்.
வாட்ட சாட்டமாய்,வண்டி மைக் கருப்பில்,வெள்ளையும் சள்ளையுமாய் கை,கழுத்தில் கனமாக ஆனால் உறுத்தாத செயின்களுடன் அபார உயரத்தில் இருந்தான்.


தான் (கோவைக்கு அருகே அப்போது பிரபலமாய் இயங்கிக் கொண்டிருந்த ஒரு கம்பெனி) எம்.டி-க்கு சொந்தக்காரன் என்று சொல்லிக் கொண்டான். பையன் இப்படியே இருந்தால் என்னங்க ஆவது என்று கேட்டு விட்டு, நான் வேண்டுமானால் செக்ரெட்டரியிடம் கேட்டு மடத்துக்குளம் அருகே உள்ள ஆலையின் சிவில் இன்ஜினியராய்(civil engineer) சேர்த்து விடவா? என்று கேட்டான்.
எனது தந்தை மதியம் என்னிடம் கேட்டார், வேலை வாய்ப்பு அலுவலகத்தையே நான் நம்பாமலிருந்த காலம், தனியார் கம்பெனி வேலைக்கு 10000 செலவு பண்ணவா? என்று மறுத்து விட,



அடுத்த நாள் கூப்பிட்டார்,அவரோடு போய் வருமாறு சொல்ல, சரி போவது தானே என்று கிளம்பினேன்.(வாடகைக் கார் உபயம் எனது தந்தை என்று பின்பு அறிந்து கொண்டேன்)


அந்தக் கம்பெனி அப்போது தாற்காலிகமாய் ஒரு திருமண மண்டபத்தில் இயங்கி வந்தது.அலுவலக கட்டுமானத்திற்க்கு ஒரு இன்ஜினியர் இருந்தார்.


(இதை முதலிலேயே சொல்லிட்டான்)
இது இன்னுமோர் ஆலை கட்டுமானத்திற்க்கு எனச் சொன்னான்.


போய் ரிஷப்ஷனில் கேட்டு,என்னை உட்காரச் சொல்லி விட்டு உள்ளே போய் விட்டு வந்தான்.
வந்து, ‘’தம்பி M.D பிஸி, செக்ரெட்டரியிடம் சொல்லி விட்டு வந்திருக்கின்றேன். அநேகமாய் நாளை நீ வர வேண்டி இருக்கும்’’



வரும் வழியில், அன்னபூர்ணாவில்(AnnaPorna) அட்டகாசமான ஒரு காபி சாப்பிட்டு விட்டு திரும்பினோம்.



அடுத்த நாள் காலை எனது தந்தையிடம்


‘’இன்று மாலை 4 மணிக்கு கோவைக்கு போன் பண்ண வேண்டும்,பையனும் இருந்தால் நல்லது,அதனால் 3.30க்கு என் வீட்டுக்கு வரச் சொல்லுங்க’’


சரியான நேரத்துக்கு வீட்டுக்குப் போய்விட்டேன். 3.40க்கு ஆட்டோ(அன்றெல்லாம் S.T.D booth மூலைமூலைக்கெல்லாம் கிடையாது,இன்றோ அதுவும் கிடையாது)3.50க்கு போன் பண்ணிட்டான். நானும் ஆட்டோக்காரரும் அவனைக்குறித்ததான சம்பாதனையில் இருந்தோம்.



அவன் ஆட்டோவிலேயே தான் போவானாம்,
இந்த பூத்துக்குத் தான் ரெகுலராக வருவானாம்.
இவனைத் தேடி தனியார் கேஸ் ஏஜென்ஸி ஆள் ஒருத்தரும்,
கவர்ன்மென்ட் கேஸ் ஏஜென்ஸி ஆளும் வந்து கொண்டிருக்கின்றனர்.
செல்வாக்கு இருக்கும் போல என்றார்.


போன் பண்ணிட்டு வந்து ‘’தம்பி நாளைக்கு உனக்கு அப்பாயின்மென்ட் தயாராகி விடும், இண்டர்வியூ எதுவும் வேண்டாம் என்று எம்.டி சொல்லிட்டாராம் அப்பாவிடம் சொல்லிடு’’என்றான்.


நான் கிளம்பினேன், ‘’தம்பி எதுக்கும் நீ காலையில் வீட்டுக்கு வாயேன் வந்து செக்ரெட்டரிக்கு போன் பண்ணி ஞாபகப்படுத்திடலாம்’’என்றான்.



காலை,மாலை இரண்டு நேரமும் ஆஜரானேன்.

தினமும் பொய்கள் புதுப்புது அவதாரமானது.

காலையில் சில சமயம் இரண்டொரு உள்ளூர் ஆட்களைப் பார்த்திருந்தேன். யாரும் யாரோடும் பேசவே மாட்டோம்,
எதோ பிட்டு படத்து தியேட்டரில் ஒருவரை ஒருவர் மௌனமாக பார்த்துக் கொள்வோம்.(இப்படித் தான் பொதுவாக எல்லோரும் ஏமாறுவது)



நண்பர்கள் வட்டாரத்தில் இவன் எதோ பிகரை கரெக்ட் பண்ணிக் கொண்டிருப்பதாக பேச்சு வளர்ந்தது.



ஆட்டோக்காரருக்கு ‘’என்ன தம்பி இது இப்படியே எத்தனை நாளுதான் வருவாய்?’’ என்று கேட்குமளவுக்கு நமது பொறுமையைச் சோதித்தான்.


அன்று திங்கட்கிழமை காலை வழக்கம் போலவே அவன் வீட்டை நோக்கிப் போய்க் கொண்டிருக்கும் போது, ஆட்டோக்காரன்,

‘’தம்பி அந்த ஆள் வீடு பூட்டிக்கிடக்கிறது, முன்னாடிப் போட்டிருந்த பிரம்பு சேர்களைக் கூட காணவில்லை வீட்டை மாத்திட்டனோ என்னவோ’’ என்றான்..


அப்பாடி ஒரு தொல்லை விட்டது என்ற மனநிலையில் இருந்ததேன்.


அப்பாவின் அலுவலகத்துக்கு வந்தேன், ‘’எங்கேடா ஜெயக்குமார் சாரை’’


‘’அப்பா, அந்தாளு வேறேங்கேயோ வீட்டை மாற்றி விட்டான் போல,அதனால் அந்த ஆளு வந்தா வீடு எங்கேன்னு கேட்டுக்கோங்க’’


‘’அடப்பாவி நல்லாப் பார்த்தாயா? உன் வேலைக்கு பணம் கொடுத்திருக்கிறேனே’’


அப்போது தான் நான் வளைத்து வளைத்து ஏமாற்றப்பட்டதை உணர்ந்தேன்


‘’இதனை முன்னமே சொல்லியிருந்தால் அவனை விட்டிருப்பேனா?

சரி இனி அவனைப் பிடித்துப் பணத்தை வாங்க முயற்சி பண்ணுவோம் என லாரிப் பேட்டைக்கு நடந்தேன்.’’




.

தொடரும்......

Tuesday, July 7, 2009

கோவை-பொள்ளாச்சி (சாவுச்) சாலை





இந்தச் சாலையில் இரண்டு சக்கரங்களில் பயணம் செய்வோர் சந்திக்க நேரிடும் அபாயங்கள் கணக்கிலடங்காதவைகள்.


பொதுவாகவே தமிழ்நாடு அரசு(அது எவன் வந்தாலும்) தனியாரின் பணத்துக்கு டாஸ்மாக்காய் ஆடும்.




இந்தத் தடத்தில் தனியாரின் ஆக்கிரமிப்பும்,பணபலமும் ஏராளம்.
மற்ற மாவட்டங்களைக் காட்டிலும் இங்கு அரசுப் போக்குவரத்து பேருந்துக்கள் தேவலாம்.


தனியாருக்கும் இவர்களுக்கும் நடக்கும் போரில் இவர்களின் கை என்னமோ சற்றே தாழ்ந்திருந்தாலும், இரண்டு சக்கர வாகனங்களை சட்டை பண்ணாமல் இருவருமே யாருக்கும் சளைத்தவர்கள் கிடையாது.


முதலாவது



இவனுக இப்படி ஓட்டுதற்க்கு காரணம் ஆகச் சொல்லப் படுவது டைமிங். 40 நிமிடத்தில் சேர வேண்டும்மாம்.
இது தனியார் ஓட்டுநர்கள் சொல்லுகின்ற காரணம்.



அரசுப் பேருந்துகளும் தான் அதே டைமிங்கில் ஓட்டி வருகின்றனர். அவர்களுக்கு அந்த பிரச்சனை இல்லையா?
என்றால் இருக்கிறது.
அதோடு குடும்பமும் இருக்கிறது.
அதனால் விரட்டி ஓட்டுவது கிடையாது.


தனியார் நாய்களுக்கும் குடும்பம் இல்லாமல் இல்லை,ஆனால் பணி நிரந்திரம் கிடையாது.
இன்னைக்கு இவனால் தான் கலெக்ஷன் கட்டு என்றால்,அன்றோடு டிரைவருக்கு வேட்டு.....

அவன் என்ன பண்ணுவான்???



இரண்டாவது


சாலை,அகலமில்லாதது.இதனைச் சீர் செய்ய இது வரை யாரும் குரல் கூட எழுப்பவில்லை.
ஏன் என்றும் புரியவில்லை.

இரண்டு வண்டிகள் போகலாம் என்றால் ரோட்டுக்கு 10 அடி தூரம் வரை ஈ காக்காய் கூட பறக்க முடியாது.இது தான் உண்மை, இதனை யாரும் இன்று வரை அகலப்படுத்த நினைக்கக் கூட இல்லை.



காரணம் இது அதிமுக தொகுதி- அது போதாதா திமுக-காரனுகளுக்கு?



அதிமுக- காரனுகளுக்கு?


அது தான் ஒரு எம் எல் ஏ, இருக்கிறாரு,புதுசா ஒரு எம்.பி வேறு வந்திருக்கிறாரு அவனுகளுக்கு என்ன வேலை? என்று மணப் பெண்ணை ஜோடித்து மணவறைக்குள் அனுப்புவது மாதிரி அனுப்பிட்டு உட்கார்ந்திருக்கானுக....(அங்க டைவுசரு கழன்டுறுக்கிறது யாருக்குத் தெரியும்?)


அவனவன் போட்ட காசை எடுக்கனும், மேலேயும் பங்கு கொடுக்கனும்,அடுத்த சீட்டுக்கு காசு தேத்தணும் உஸ் அப்பாடி இப்பவே கண்ணைக் கட்டுதுன்ணு உட்கார்ந்துட்டானுக....


ஒரு வேளை நாம் கேட்டால் ‘’இங்க பாருங்க நான் கடிதம் எழுதியிருக்கிறேன்’’ என்று காண்பித்தாலும் காண்பிப்பானுக...


தீர்வு தான் என்ன??


1.பயண நேரத்தை மாற்ற வேண்டும்.


2.சாலையை அகலப்படுத்த வேண்டும்.


3.கண்காணிப்பு கேமிரா பொருத்த வேண்டும்


4.ஒரு முறை விபத்து நடந்தால் ஓட்டுநரின் லைசென்ஸை ரத்தே செய்ய வேண்டும்.


5.இரண்டாவது முறை விபத்து நடத்தும் பேருந்தின் லைசென்ஸை நிறுத்த வேண்டும்


இவைகளை தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்த நடவடிக்கை தேவை.


கலைஞருக்குத் தான் கடிதம் எழுத முடியுமா??

Monday, July 6, 2009

மழை



இது ஒரு இன்னுமோர் ஊக்க சக்தி. இயற்கை நம்மை புதுப்பித்துக் கொள்ள கொடுக்கும் தருணம்.

உடம்பை ஒரு ஆட்டு ஆட்டி சீர் கெட்டவைகளை சரிப்படுத்த ஞாபகப்படுத்துகிறது.(ஜலதோஷம்,காயச்சல்)

முடியாதவைகளை ஒரம் கட்டுகிறது.(மனிதர்களுக்கு மரணம்)



பறவைகளைப் பாருங்கள்,மழையை மௌனமாய் வரவேற்கும்.

மனிதர்களுக்கு (நகரத்து) இது ஒரு தொல்லையாக கருதப்படுதப்படுகிறது.

எவனுக்குள் உழவனுடைய மரபணுக்கள் இன்னும் மிச்சமிருக்கிறதோ, அவன் மழையை ஆராதிப்பான்.







நான் குஜராத்தில் நிர்மா சோடா ஆஷ் கட்டுமானத்தில் 98ம் வருடம் இருந்த போது,

மழையையும், தாண்டியாவையும் பார்க்க வாய்ப்பு கிடைத்தது.



அவர்கள் நகர மக்கள் தான்,(பாவ் நகர்,குஜராத்) ஆனால் அவர்களுக்குள் அந்த மரபணுக்கள் அடர்த்தியாக இருக்கின்றது.

அதனால் தான் மழை வந்தவுடன், மொட்டை மாடிக்கோ, சாலைக்கோ வந்து ஆட்டம் போடுவதைக் காண கண் கோடி வேண்டும்..

தாண்டியாவும் அதே மாதிரி தான்.சிறியதில் இருந்து, பெரியவர் வரை அதில் காண்பிக்கும் ஈடுபாடு பிரமிக்க வைத்தது.




அதே பிரமிப்பு தான் குஜராத் கலவரத்தின் போரும் ஏற்பட்டது.
எப்படி இது சாத்தியம் என்று.
கலையை ரசிக்கும் மனதுக்குள் அவ்வளவு வக்கிரமா?
மதம் ஒரு மனிதனை எவ்வளவு பாடு படுத்துகிறது.



மழை




இன்று தவறுவதற்கு இன்று வரை என்ன காரணம் என்று பார்த்திருப்போமா?(அதுக்கெல்லாம் நமக்கு நேரம் இல்லை)

மரத்தை அழிப்பது மட்டும் அல்ல,

ஆக்கிரமிப்பும் கூடத்தான்.
நீர் வழித்தடங்களை எல்லாம் விற்றுக் காசாக்கி விட்டோம்.
அமெரிக்கா-காரனும், ஐரோப்பியாக்காரனும் கார்பன் கிரடிட் மூலம் பூமியை குளிரப்பண்ண நமக்கு ஆலோசனை தருவானுக, ஆனால் அவனுக நாட்டில் தான் கார்பன் உமிழ்வது அதிகம்.

இந்த மழைக்கு அன்னைக்கே பள்ளிக்கூடம் ஒதுங்கியிருந்தால்
வாழ்க்கை நல்லாயிருந்திருக்குமே என படிக்காதவனை உணரச் செய்ய தேவை ஒரு மழை.


அனைத்துக்கும் ஆதார மழையை காப்போம்.

Friday, July 3, 2009

இலங்கை-1

பல வருடங்களாக சிந்தித்திருக்கின்றேன்,இலங்கைப் பிரச்சனையில் ஒருமித்த கருத்து ஏன் எட்டப்படவில்லை என்று?
மக்கள்83ம் வருடங்களில் பொள்ளாச்சியில் பத்தாவது படிக்கும் பொழுது இலங்கைப் பிரச்சனைக்காய் வகுப்பை புறக்கணித்த போது, (பிரச்சனையின் தீவிரம் அப்போது தெரிந்திருக்கவில்லை) எல்லோரும் 9.30 க்குள் பேரணியை முடித்து விட்டு விருப்பப் பட்ட தியேட்டர்களில் அடைக்கலமாக,எனக்கு வீட்டுக்கு போக உபயோகப்பட்டது( நான் சினிமாவிற்குப் போகாததற்கு காரணம் அப்போது பஸ் பாஸைத் தவிர என்னிடம் 1ரூ இருக்கும்.)

அடுத்த வருடம் அகதிகள் பொள்ளாச்சி முகாமுக்கு அனுப்ப பட்டு வேர் ஹவுசில் தங்க வைக்க பட்ட போது சென்று பார்த்து ஏன் போனோமென்று நினைத்து வருத்தப் பட்டது உண்டு.(காரணம் அகதியாய் வந்த பெண்களின் பசிக் கொடுமையை பயன் படுத்தி பெண்டாண்டவர்களைப் பற்றி அப் பெண்கள் ‘’அங்கே எதுக்காய் எதை இழக்க கூடாது என்று ஓடி வந்தோமோ அதை இங்கே எங்கள் குழந்தைகளின் பசிக்காய் இதை செய்கிறோமே’’ என்று கதறியதை கேட்டதால்)
அந்த அளவுக்கு இரக்கமற்றவர்கள் தான் இப்போது இரங்குவார்களா என்று தேர்தல் நேரத்தில் நான் நினைத்தேன். அது தான் நடந்தது.

அரசியல்
ராஜீவ் காந்தி மரணத்தின் போது நாங்கள் தி.மு.க ஆண்டு (எ) நாச்சிமுத்துவுக்காய் எங்களுடைய சுய விருப்பத்தில் களப்பணியாற்றிய போது ராஜீவ் மறைவு நேர்ந்தது, அன்றைய தினங்களில் நாங்களும் மறைந்தே வாழ நேர்ந்த்து.

அ.தி.மு.க வின் திட்டமிட்ட வதந்திகளினால் இது நேர்ந்தது.

ஒரு திமுக-காரனையும் விடாமல் தாக்கினார்கள் ஆனால்.வட இந்தியாவில் ஒரு தமிழன் கூடத் தாக்கப்படவில்லை,
இதே தான் இன்றும் தொடர்கின்றது.

கடவுள் என்கின்ற சினிமா இயக்குநர், கருணாநிதியிடம் கதை சொல்லும் போது..
‘’உங்களுக்கு சூப்பர் கேரக்கடருங்கணா, எல்லோரும் அடிப்பாய்ங்க, வளைச்சு வளைச்சு அடிப்பாய்ங்க, அடிக்கும் போது ஒருத்தன் கூட இவரு ரொம்ப நல்லவருன்னு சொல்லாம அடிப்பாய்ங்க,
உங்க கண்ணுல இருந்து தண்ணியா வரும், ஆனா பார்க்கிறவன் கண்ணுல இருந்து ஒரு சொட்டுக் கூட வராது’’ அப்படின்னு
சொல்லி அனுப்பப் பட்டவர் கலைஞர்.



தொடர்கிறேன்

Thursday, July 2, 2009

வந்துட்டேன்.... வந்துட்டேன்....

நான் பினாத்தி(ப்ளாக்கி) இன்றோடு இரண்டு வருடங்களாகி விட்டது.
இரண்டு வருடங்களாய் இந்த பிளாக்கர்களை படிக்க மட்டுமே நேரம் இருந்தது.இப்போது இந்தியாவிற்குள் காலடி வைத்து 5 மாதங்களாகி விட்டதானதால் இனியாவது நாம் பதியலாம் என்று முடிவோடு களமிறங்குகிறேன், தங்களது ஆதரவை நாடுகின்றேன்.

பழைய பதிவுகளை படிக்க வேண்டாம்,புதியவைகளை நாளை முதல் பதிகின்றேன்........